ரூ.3 ஆயிரத்திற்காக இளைஞன் தலையில் கல்லைப்போட்டு கொலை
பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் மீது திருடர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் சங்கம் விஹார் பகுதியை சேர்ந்த பங்கஜ் மற்றும் அவரது நண்பர் ஜதின் (வயது 21) இருவரும் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 20-ம் தேதி பங்கஜ் மற்றும் ஜதின் ஆகிய இருவரும் தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2 மணியளவில் சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஒரு தெருவில் நண்பர்கள் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை 7 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்தது. வெளிச்சம் இல்லாத பகுதியில் அந்த இருவரையும் இடைமறித்த அந்த கும்பல் அவர்களிடம் இருந்த ரூ.3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிக்க முற்பட்டுள்ளது.
இந்த திருட்டு முயற்சியை தடுக்க பங்கஜ் மற்றும் ஜதின் முயன்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த திருட்டு கும்பல் பங்கஜ் மற்றும் ஜதினை கடுமையாக தாக்கினர். திருட்டு கும்பலில் இருவர் ஜதின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் ஜதின் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். கடுமையாக தாக்கப்பட்ட பங்கஜ் மற்றும் ஜதினை அந்த கும்பல் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் வீசிச்சென்றனர்.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த நண்பர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கல்லைப்போட்டு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த ஜதின் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை மற்றும் கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரம்சன் அலி என்ற குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும், இது மத ரீதியிலான தாக்குதல் இல்லை எனவும் எஞ்சிய குற்றவாளிகள் அனைவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.