காலம் மாறும்... அப்போது உங்களை யார் காப்பாற்ற வருவார்கள் - ஒவைசி சர்ச்சை பேச்சு
காலம் மாறும்... அப்போது உங்களை யார் காப்பாற்ற வருவார்கள் என்று ஒவைசி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் உத்தரபிரதேச போலீசாரை எச்சரிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார்.
பிரசார மேடையில் ஒவைசி பேசியதாவது, நான் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். யோகி ஆதித்யநாத் நிரந்தரமாக முதல் மந்திரியாக இருக்கமாட்டார். மோடி நிரந்தரமாக பிரதமராக இருக்கமாட்டார். இஸ்லாமியர்களாகிய நாங்கள் காலத்தால் அமைதியாக இருக்கிறோம்.
ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த அநீதியை நாங்கள் மறக்கமாட்டோம். உங்களின் அநீதியை நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். கடவுள் அவரின் சக்தியால் உங்களை அழிப்பார். நாங்கள் நினைவில் கொள்வோம். காலம் மாறும். அப்போது உங்களை காப்பாற்ற யார் வருவார்கள். யோகி ஆதித்யநாத் அவரது இடத்திற்கும், மோடி மலைக்கு சென்றதும் உங்களை காப்பாற்ற யார் வருவார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்’ என்றார்.
ஒவைசியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.