உ.பி. தேர்தலை தள்ளி வையுங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் வேண்டுகோள்
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை இரண்டு மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்றில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேகர் யாதவ், கொரோனா பரவல் அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில், தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணை பட்டியலிடப்படுவதால் கோர்ட்டில் தினமும் கூட்டம் அதிகரிக்கிறது. பெரும்பாலான மக்கள் சமூக இடைவேளி உள்ளிட்ட எந்த வித கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை. ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவின் 3-வது அலை ஏற்படலாம்.
கிராம பஞ்சாயத்து தேர்தல், மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் அதிகமானோருக்கு கொரோனா பரவியது. அது அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்துகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமன்றது.
அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடைபெறுவது நிற்காவிட்டால் கொரோனா இரண்டாவது அலையை விட மோசமக இருக்கும். ஒமைக்ரான் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும்’ என்றார்.