பஞ்சாப் கோர்ட்டில் குண்டு வெடிப்பு; மாநில அரசிடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்

பஞ்சாப் கோர்ட்டில் குண்டு வெடிப்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

Update: 2021-12-23 11:29 GMT
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து கோர்ட்டு போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 

இதற்கிடையில், இந்த குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் குழுவினர், தேசிய பாதுகாப்பு படையின் குழுவினர் விரைந்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், லூதியானா கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. 

பஞ்சாப் அரசு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது விசாரணையை தீவிரபடுத்த உள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்திலும் மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்