டெல்லியில் வாட்டும் கடும் குளிர்...! நெருப்பு மூட்டி குளிர் காயும் மக்கள்..!!

வட மாநிலங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து கடுங்குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2021-12-23 03:57 GMT
புதுடெல்லி,

வடக்கு பாகிஸ்தான் அருகே மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் மேற்கத்திய காற்றும் சேர்ந்து பேசுவதால் இந்தியாவின் வடமாநிலங்களில் குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் டெல்லி காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது.   டெல்லியில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்த 4 மாதங்களும் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கொண்டே வந்தது. உத்திரப்பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட், ஹிமாச்சல்பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விடியற்காலை நேரத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

மேலும் பனிமூட்டம் காரணமாக மக்கள் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய தொடங்கியுள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் பகலிலேயே விளக்கை எரியவிட்டு வாகனங்களில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேசிய தலைநகரில் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டு 'மோசம்' எனும் நிலையில் நீடிக்கிறது. காற்று தரக் குறியீடு 387 வரையிலான அளவுகளில் நீடிக்கிறது.   டெல்லியில் காற்றுமாசுவின் தரநிலை ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், பனியும் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்