ரபேல் போர் விமானத்துக்கு ஏவுகணை வழங்க தாமதம்; பிரான்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.8½ கோடி அபராதம்
ரபேல் போர் விமானத்துக்கு ஏவுகணை வழங்க தாமதம் செய்த பிரான்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.8½ கோடி அபராதம் விதித்துள்ளது.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரத்தொடங்கி விட்டன.
இந்த போர் விமானங்களுக்கு தேவையான ஏவுகணைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.டி.ஏ. நிறுவனம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஏவுகணைகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் காலதாமதம் செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு மத்திய ராணுவ அமைச்சகம் 1 மில்லியன் யூரோ (சுமார் ரூ.8½ கோடி) அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை அந்த நிறுவனம் செலுத்தி விட்டது. இருப்பினும் அபராதம் விதித்ததற்கு தனது எதிர்ப்பை மத்திய ராணுவ அமைச்சகத்திடம் பதிவு செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.