மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை உத்தர பிரதேசத்தில் மாஃபியாக்கள் மற்றும் குண்டர்களின் ராஜ்ஜியம் இருந்தது என பிரதமர் மோடி விமர்சித்தார்.
பிரக்யா ராஜ்,
உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி பிரயாக்ராஜ் நகரில் இன்று மிக பிரம்மாண்டமான மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண்களுக்கான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 கோடி உதவித் தொகையை மத்திய அரசு இன்று செலுத்தியது. அதை தொடர்ந்து ‘முக்கிய மந்திரி கன்னிய சுமங்கலா திட்டத்தின்’ கீழ் பயன்பெறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களுக்கு உதவித் தொகையை பிரதமர் மோடி வழங்கினார்
பிரக்யாராஜ்ஜில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது அரசு மகளிர் நலனுக்காக மேற்கொண்ட திட்டங்களை சுட்டிக்காட்டி பேசினார். பிரதமர் மோடி பேசியதாவது:
பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்தது. ஆனால், பெண்களும் தங்கள் கல்விக்காக கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது. ஆகவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் பெண்கள் தங்களது கல்வியை தொடரவும், சம வாய்ப்புகளை பெறவும் முடியும். ஆனால் சில பிரிவினர் மட்டும் இந்த முடிவால் தொந்தரவு அடைந்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை உத்தர பிரதேசத்தில் மாஃபியாக்கள் மற்றும் குண்டர்களின் ராஜ்ஜியம் இருந்தது. பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், நீங்கள் எதையும் கூற முடியாது. காவல் நிலையம் சென்றால் கிரிமினல்களுக்கு ஆதரவாக தொலைபேசி அழைப்பு வரும். ஆனால், யோகி அரசாங்கம் கிரிமினல்களை ஒடுக்கியுள்ளது” என்றார்.