ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் பிரிவு பஞ்சாப் செக்டரில் நிலைநிறுத்தம்

ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் படைப்பிரிவை இந்தியா,பஞ்சாப் செக்டரில் நிலைநிறுத்துகிறது.

Update: 2021-12-21 04:57 GMT
புதுடெல்லி

சீனா மற்றும்  பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - ரஷியா இடையே  பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை ஆகியவற்றை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையை மீறி, ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே அக்டோபர் மாதம் கையெழுத்தானது.  

இந்திய விமானப்படை அதன்  எஸ். 400  வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை பஞ்சாப் செக்டரில்  நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 

முதல் படைப்பிரிவின் இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வான்வழி அச்சுறுத்தல்களை கவனித்துக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்" என்று அரசு வட்டாரங்கள் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தன.ஏவுகணை அமைப்புகளின் உபகரணங்கள் வான் மற்றும் கடல் வழிகள் வழியாக வருகின்றன, மேலும் அவை விரைவில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிலைநிறுத்தப்படும் என்று  ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

உலகின் அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படும் எஸ்-400 ரக ஏவுகணைகள், எஸ் 300 ரக ஏவுகணைகளிலிருந்து மேம்படுத்தப்பட்டவை. 1993-ம் ஆண்டு, எஸ் 300 ஏவுகணைகளை மேம்படுத்தும் பணியைத் தொடங்கியது ரஷியா. 1999 முதல் அந்த ஏவுகணைகள் சோதனைசெய்யப்பட்டன. 2007-ம் ஆண்டு அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது ரஷியா.

எதிரி நாடுகளின் வான்வழித் தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்து, பதில் தாக்குதல் நடத்தும் திறன்கொண்டவை எஸ்-400 ரக ஏவுகணைகள். இவை, போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் கண்டறிந்து தாக்கக்கூடிய திறன் பெற்றதவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரக ஏவுகணைகள், 400 கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாகப் பயணித்துத் தாக்கக்கூடியவை என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்