‘எங்கள் குரல்களை மத்திய அரசால் தடுக்க முடியாது’ - ராகுல் காந்தி
எங்கள் குரல்களை தடுக்க முடியாது என்று மத்திய அரசு ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க கேட்டு எதிர்க்கட்சிகள் போராடி வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. எதிர்க்கட்சிகளை அவையில் விவாதத்துக்கு அனுமதிக்காதது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
‘நாடாளுமன்றத்தை எப்படி கையாள வேண்டும் என்பது கூட தெரியாத என்ன மாதிரியான அரசு இது? விலைவாசி உயர்வு, லகிம்பூர் விவகாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, பெகாசஸ், லடாக், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போன்ற பிரச்சினைகளில் எங்கள் குரல்களை அவர்களால் தடுக்க முடியாது.
மக்கள் நலன் சார்ந்த இந்த பிரச்சினைகளில், அரசுக்கு தைரியம் இருந்தால் எதிர்க்கட்சிகளை விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இடைவிடாத தாக்குதல் நடக்கிறது. எனவேதான் நாங்கள் இங்கே போராடுகிறோம்.’ என்று பதிவிட்டுள்ளார்.