அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொலை: விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு

அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-19 03:14 GMT
அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. இங்கு நேற்று மாலை பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் குதித்த ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முற்பட்டார். இந்த சம்பவம் நேரடியாக அங்கிருந்த டிவியில் ஒளிபரப்பானதால், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொற்கோயில் நிா்வாகக் குழுவினா், அவரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். அப்போது, கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக, அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜீத் சிங் சன்னி, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்றும் அவருக்கு 20-25 வயதுவரை இருக்கலாம் என்றும் அவருடன் எத்தனை போ் இருந்தனா் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமிர்தரஸ் துணை காவல் ஆணையா் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்