பஞ்சாப் சட்டசபை தேர்தல்: அமரிந்தர் சிங்குடன் பா.ஜ.க. கூட்டணி - அதிகாரபூர்வ அறிவிப்பு
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் சார்பில் இங்கு முதல்-மந்திரியாக இருந்து மேலிடத்துடன் அதிருப்தி ஏற்பட்டு பதவி விலகிய அமரிந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில பா.ஜ.க. பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான கஜேந்திர ஷெகாவத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அமரிந்தர் சிங் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நிருபர்களிடம் பேசிய கஜேந்திர ஷெகாவத், “பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வும், அமரிந்தர் சிங்கும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவோம், நாங்கள் ஒன்றாக செயல்படுவோம் என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என குறிப்பிட்டார். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.