இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது. நேற்று வரையில் நாடு முழுவதும் 82 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 40, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கனா தலா 8, கேரளா 7, குஜராத் 5, தமிழ்நாடு,ஆந்திரா, சண்டிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர், தேவையற்ற பயணங்கள், பெருங்கூட்டங்கள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று கூறினார். எந்தெந்த மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 5%க்கும் மேல் இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் எல்லாம் சில கட்டுப்பாடுகளை விதிப்பது சிறந்தது. குறைந்தது இரண்டு வாரங்களாவது இந்த நடவடிக்கையைக் கடைப்பிடிக்கலாம் எனக்கூறினார்.