வருத்தம் தெரிவித்துவிட்டு நாடாளுமன்றம் வாருங்கள் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு பிரகலாத் ஜோஷி அழைப்பு
வருத்தம் தெரிவித்துவிட்டு நாடாளுமன்றம் வாருங்கள் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து எதிக்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அவை பங்கேற்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யபப்ட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்திவிட்டு நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். எந்த விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’ என்றார்.