இந்து மத கடவுள்களை அவமதித்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கிடைக்கும் இடம் சிறை தான் - ம.பி. மந்திரி எச்சரிக்கை
இந்து மத கடவுள்களை அவமதித்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கிடைக்கும் இடம் சிறைச்சாலை தான் என்று மத்தியபிரதேசம் மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போபால்,
மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபரபலமானவர்கள் குர்னால் கம்ரா மற்றும் முனவர் ஃபரூகி. இதற்கிடையில், வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் 'இரண்டு இந்தியா’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த முனவர் ஃபரூகி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவர் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து பெங்களூரில் நடைபெறவிருந்த மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.
அதேபோல், மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் குர்னால் கமரா. இவரது நிகழ்ச்சிக்கும் இந்து அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இருவரின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, தான் ஏற்பட்டு செய்துள்ள நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த வாருங்கள் என்று சர்ச்சைக்குரிய குர்னால் கம்ரா, முனவர் ஃபரூகிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திக் விஜய சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், குருனால், முனவர் உங்களுக்காக நான் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறேன். அனைத்து பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஒரேஒரு நிபந்தனை தான்... நகைச்சுவை திக் விஜய சிங்கை பற்றியே இருக்க வேண்டும். சங்கீஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.. பயப்பட வேண்டாம். நிகழ்ச்சிக்கான இடம் மற்றும் நேரத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள். உங்களின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குர்னால் கம்ரா, முனவர் ஃபரூகி ஆகியோரை போபாலில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் அழைத்துள்ளது தொடர்பாக மத்தியபிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மந்திரி நரோட்டம் மிஸ்ரா, மத்தியபிரதேசத்தில் இந்து கடவுள்களை அவமதித்து ஏதேனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டால், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கிடைக்கும் இடம் சிறைச்சாலை தான். சமூகத்தின் எந்தப் பிரிவினரின் உணர்வுகளோடும் விளையாட யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்றார்.