எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் புகார்கள்; இனி ஆன்லைன் மூலம் அனுப்பலாம்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் புகார்களை ஆன்லைன் மூலமாக அனுப்பும் வசதியை லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-14 03:36 GMT
புதுடெல்லி, 

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக்அயுக்தா அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் தேசிய அளவில் லோக்பாலும், மாநில அளவில் லோக்அயுக்தாவும் செயல்பட்டு வருகின்றன.

லோக்பால் அமைப்பில் ஊழல் புகார்களை தெரிவிப்பதற்கு நேரடி முறை, இ-மெயில், தபால் வழி போன்ற முறைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆன்லைன் மூலமும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்தவகையில் lokpalonline.gov.in. என்ற இணையதளம் மூலம் இந்த புகார்களை எந்த இடத்தில் இருந்தும், எப்போதும் அனுப்ப முடியும்.

இந்த முறையில், அனைத்து கட்டங்களிலும் புகாரின் நிலை குறித்த தகவல்கள் புகார்தாரர்களுக்கு இ-மெயில் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் கிடைக்கும். அத்துடன் இறுதி தீர்ப்பின் நகலும் வழக்கை தொடர்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வசதியை லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதி பினாகி சந்திர கோஸ் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘லோக்பால் ஆன்லைன் வழிமுறை பாதுகாப்பானது. இதுதாக்கல் செய்வது முதல், இறுதி தீர்ப்புவரை புகார்தாரர்கள் தங்கள் புகாரை கையாள வழி செய்கிறது. மேலும் இது அதிக வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் கொண்டு வரும்’ என்று தெரிவித்தார்.

லோக்பால் ஆன்லைன் என்பது இணைய அடிப்படையிலான வசதி எனக்கூறிய அவர், இதன் மூலம் வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் புகார்களுக்கு விரைவாக தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.

லோக்பால் உறுப்பினர் நீதிபதி குமாரி பேசும்போது, லோக்பால் ஆன்லைன் வழிமுறை குறித்து கிராமப்புறங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்