குஜராத்: பழங்குடியினர் விழாவில் உணவு விருந்து சாப்பிட்ட 4 பேர் பலி
12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
குஜராத்,
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமத்தில் பாரம்பரிய மத விழா நடத்தப்பட்டது. பாரம்பரியமான மத விழாவில் உள்ளூர் தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்யப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதி நாளில் உணவு விருந்து நடத்தப்பட்டது.
இதில் உணவு விருந்து சாப்பிட்ட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் தேவ்கத் பரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து போலீசார் 4 பேரின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமத்திற்கு விரைந்து வந்து, கிராம மக்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உணவில் விஷம் அல்லது உள்ளூர்வாசிகள் தாங்களாகவே காய்ச்சிய பானத்தை குடித்த காரணத்தாலோ மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.