சபரிமலை சன்னிதானத்துக்கு நீலிமலை, அப்பச்சிமேடு பாதை வழியாக செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

சபரிமலை சன்னிதானத்துக்கு நீலிமலை, அப்பச்சிமேடு பாதை வழியாக செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-12 03:22 GMT
திருவனந்தபுரம், 

பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்பு, கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலைக்கு செல்லும் அப்பச்சி மேடு, நீலிமலை பாதை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு இருந்தது. இதனால், அய்யப்ப பக்தர்கள் பம்பையில் இருந்து சாமி அய்யப்பன் ரோடு வழியாக சபரிமலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பக்தர்கள் மலை ஏற அந்த பாதை திறந்து விடப்படுகிறது. 

நள்ளிரவு 2 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இந்த வழியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் பம்பை ஆற்றில், பாதுகாப்பு கருதி சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க அறைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வு எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்