இந்தியாவை இன்னும் சக்தி வாய்ந்த நாடாக மாற்றுவோம்: பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உயிரிழப்பு, நாட்டுப்பற்று நிறைந்த அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 'சரயு நஹர்' தேசியத் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் உயிரிழப்பு, தேசபக்தி நிறைந்த ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். துணிச்சல் மிக்கவரான பிபின் ராவத், இந்தியாவின் ஆயுதப்படையை சுயசார்பு மிக்கதாக மாற்ற கடினமாக உழைத்தார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நெஞ்சுரம் மிக்க வீரர்களுக்கு இந்த மண்ணில் இருந்து எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடினமாக சிகிச்சை அளித்து வருகின்றன. இந்தியா துக்கத்தில் உள்ளது, ஆனால் வேதனையில் இருந்தாலும், நாம் நமது வேகத்தையோ அல்லது வளர்ச்சியையோ நிறுத்தவில்லை. இந்தியா ஒருபோதும் நிறுத்தாது. இந்தியர்களாகிய நாம் ஒருங்கிணைந்து கடினமாக உழைப்பதோடு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அனைத்து சவால்களையும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவை இன்னும் சக்திவாய்ந்ததாகவும், மேலும் வளமானதாகவும் நாம் மாற்றுவோம்” என்றார்.