டெல்லி எல்லையை காலி செய்கிறார்களா விவசாயிகள்..?
விவசாயிகள் போராட்டம், தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பயனாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.
விவசாயிகள் போராட்டம், தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் போராட்டம் நடைபெற்று வரும் இடங்களை விட்டு காலி செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், விவசாயிகள் போராட்டம் எக்காரணத்தை கொண்டும் கைவிடப்பட மாட்டாது. மாறாக, அந்தந்த மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் வெவ்வேறு வகையில் தொடர்ந்து அந்தந்த மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் நடத்துவார்கள். மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உத்திரவாதம் கிடைக்கும் வரையில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இப்போதைக்கு இன்னும் இரு தினங்களுக்குள் டெல்லி எல்லையிலிருந்து மட்டும் போராட்டம் வாபஸ் பெறப்படப் போவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் சார்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக,விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக மத்திய அரசு ஒரு வரைவு திட்டத்தை விவசாய சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளின் மீதான மத்திய அரசின் பதில் திருப்தியளிக்காததால், வரைவு திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யுமாறும், கூடுதல் விளக்கம் கேட்டும் அந்த வரைவு திட்டத்தை மத்திய அரசுக்கே விவசாயிகள் திருப்பி அனுப்பினர்.
விவசாயிகள் சார்பில் திருப்பி அனுப்பப்பட்ட வரைவு திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்களை மேற்கொண்டு பதில் அளிக்கும் என்று விவசாயிகள் சங்கம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த நிலையில், இன்று மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவசாய அமைப்பின் நிர்வாகிகள் மீண்டும் கூடி முடிவெடுக்க உள்ளனர். மத்திய அரசிடம் இருந்து மாற்றம் செய்யப்பட்ட வரைவு திட்டம் அளிக்கப்படும் பட்சத்தில் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
முன்னதாக நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.