பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-08 15:46 GMT
புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிஹா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய குரூப் கேப்டன் வருண் சிங் படுகாயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் அவசர அவசரமாக நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவல், பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்க்கு மவுன அஞசலி செலுத்தினர். இந்த கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கபப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.    

மேலும் செய்திகள்