இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 28 நாட்களில் தீர்ப்பு; குற்றவாளிக்கு மரண தண்டனை
இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் சூரத் நகர் பண்டிசாரா நகரை சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை கடந்த 4-ம் தேதி மாயமானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், குழந்தை மாயமான பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலையில் உள்ள தொழிற்சாலை அருகே கடந்த 7-ம் தேதி அந்த குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அந்த குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த தொழிற்சாலையில் பணியாற்றிவந்த 35 வயது நிரம்பிய யோகேஷ் யாதவ் என்பவனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டரை வயது குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை யாதவ் ஒப்புக்கொண்டான்.
பீகாரை சேர்ந்த யாதவ் பண்டிசாரா நகரில் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்துவந்துள்ளான். புலம்பெயர் தொழிலாளியான யாதவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் பண்டிசாரா நகரில் தங்கி யாதவ் வேலை செய்துவந்த நிலையில் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டுள்ளான்.
இரண்டரை வயது குழந்தையை யாதவ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு சூரத் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் யாதவ் மீது 7 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 43 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த யாதவிற்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. குற்றம் நடைபெற்ற 28 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.