மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு: விவசாயிகள் அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்ற நிலையிலும் டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என்றும், கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Update: 2021-12-05 00:17 GMT
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.

விவசாயிகள் போராட்டம்

இந்த சட்டங்களால் வேளாண் துறைக்கு அச்சுறுத்தல் என கவலையை வெளியிட்ட விவசாயிகள், அந்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி போராட்டக்களத்தில் குதித்தனர்.

இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் இருந்தே டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டுள்ள அவர்கள், ஓராண்டுக்கும் மேலாக அங்கு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் வாபஸ்

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தில், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக கடந்த மாதம் (நவம்பர்) அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பான மசோதாவும் கடந்த 29-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

குறைந்தபட்ச ஆதரவு விலை

ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்பட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதமும் எழுதினர்.

உயர்மட்டக்குழு

முன்னதாக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தபோது, விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

எனவே இந்த குழுவில் இடம்பெறும் விவசாயிகளின் பெயர்களை அறிவிக்குமாறும் விவசாயிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருந்தது.

விவசாயிகள் ஆலோசனை

இந்தநிலையில் தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக விவசாய அமைப்பு பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசித்தனர். டெல்லியில் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நடத்திய இந்த கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, லகிம்பூர் கேரி வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

5 பேர் குழு அமைப்பு

பின்னர், விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விவசாயிகள் சார்பில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்தவகையில் விவசாய அமைப்பு தலைவர்களான பல்பிர் சிங் ராஜிவால், அசோக் தாவ்லே, சிவகுமார் கக்கா, குர்ணம் சிங் சதுனி, யுத்விர் சிங் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தங்களின் எதிர்கால நடவடிக்கைகளை முடிவு செய்வது குறித்து வருகிற 7-ந்தேதி மீண்டும் கூடி ஆலோசனை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டதாக பாரதிய கிசான் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாபஸ் இல்லை

இதைப்போல விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறும் வரை டெல்லி எல்லைகளில் நடைபெறும் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் எனவும் விவசாய அமைப்பு தலைவர்கள் பின்னர் அறிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்யும் எனவும் அவர்கள் கூறினர்.

டெல்லி எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வரும் போராட்டத்தை மேலும் தொடர்வது என விவசாயிகள் முடிவு செய்திருக்கும் நிலையில், அங்கு நடந்து வரும் போராட்டம் மீண்டும் வேகமெடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்