திருப்பதி 2-வது மலைப்பாதையில் வாகன போக்குவரத்து தொடங்கியது
திருப்பதி 2-வது மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை சரி செய்து, அதன் வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
திருமலை,
அண்மையில் பெய்த மழையால் திருப்பதி 2-வது மலைப்பாதையில் பல இடங்களில் மண், பாறைகள், மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் 2-வது மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 1-வது மலைப்பாதை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வந்தன.
நிலச்சரிவு ஏற்பட்ட 2-வது மலைப்பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட 2-வது மலைப்பாதையை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அண்மையில் பெய்த கனமழையால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 1-வது மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய அளவிலான பாறைகள் சரிந்து விழுந்ததில் சாலை பழுதாகி விட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் சற்று முன்பாக அந்த இடங்களை கடந்து ஒரு பஸ் சென்றுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டபோது ஏழுமலையானின் அருளால் ஒரு பக்தருக்குக் கூட எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தச் சம்பவத்தை இப்போதும் நினைத்தால் உள்ளம் மகிழ்ந்து உடல் சிலிர்க்கிறது. ஏழுமலையான் உலக மக்களை காத்தருள்வார் என்பது நிதர்சனமான உண்மை என்பது அதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
2-வது மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு, தார் சாலையில் ஏற்பட்ட விரிசல், சேதம் அடைந்த தடுப்புச்சுவர் ஆகியவை முற்றிலும் வலுவாக சீரமைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்தே 2-வது மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
தேவஸ்தான முதன்மை என்ஜினீயர், சிறந்த வல்லுனர்களை அழைத்து வந்து, ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இணைந்து 2-வது மலைப்பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். மலைப்பாதை சீரமைப்புப் பணி தொடரும்.
மேலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் திருப்பதி 2-வது மலைப்பாதை, 2-வது மலைப்பாதை சீரமைக்கப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.