இந்திய கடற்படை தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-04 05:54 GMT
புதுடெல்லி,

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்கப்பல்களை தாக்கி அழித்தனர். ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலில்  3 ஏவுகணை படகுகளான ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட், ஐ.என்.எஸ். வீர் ஆகிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்துக்குள் சென்று எண்ணெய் கிடங்குகளை துவம்சம் செய்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நடந்த மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் இதுவாகும். இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி  “இந்திய கடற்படை தினம்” கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்களும் நினைவுகூரப்படுகின்றனர். 

அந்த வகையில், இன்றைய தினம் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி கடற்படை தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கடற்படையின் முன்மாதிரியான பங்களிப்பிற்காக நாம் பெருமை கொள்கிறோம். இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் நமது கடற்படை வீரர்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்