பம்பையில் இருந்து பழனி உள்பட முக்கிய இடங்களுக்கு நேரடி பஸ் வசதி - கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து பழனி உள்பட முக்கிய இடங்களுக்கு நேரடி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பம்பையில் இருந்து பழனி, கோவை மற்றும் தென்காசிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக சென்னை, மதுரை ஆகிய இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும். மொத்தம் 12 பஸ்கள் தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும்.
தற்போது பம்பை பஸ் நிலையத்தில் இருந்து 128 பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 12-ந் தேதி முதல் மேலும் கூடுதலாக 99 பஸ்கள் இயக்கப்படும். நிலக்கல்- பம்பை வழித்தடத்தில் 24 மணி நேரமும் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் தொடர் பஸ் வசதி உள்ளது.
நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை 4 லட்சத்து 52 ஆயிரம் பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி உள்ளனர். தினசரி பம்பையில் இருந்து நேரடியாக செங்கன்னூருக்கு 35 பஸ்கள், கோட்டயத்திற்கு 10 பஸ்கள், திருவனந்தபுரத்திற்கு 10 பஸ்கள், எர்ணாகுளத்திற்கு 7 பஸ்கள், எருமேலிக்கு 4, பத்தனம்திட்டைக்கு 4, குமுளிக்கு 4 என பஸ்கள் இயக்கப்படுகிறது. மொத்தம் 306 பணியாளர்கள் இரவு, பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.