பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை தூக்கிச்சென்ற கில்லாடி ஆடு...!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கிருந்த ஆவணங்களை வாயில் கவ்வி தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2021-12-03 08:34 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் ஷவுக்பிபூரில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்துவரும் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணத்தை தனது வாயில் கவ்வி தூக்கிச்சென்றது.

அலுவலகத்திற்குள் ஆடு நிற்பதை கண்ட ஊழியர்கள் அதை விரட்ட முயற்சித்தனர். இதனால், ஆவணத்தை தனது வாயில் கவ்விய கில்லாடி ஆடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால், அதிருச்சியடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓடிய ஆட்டை விரட்டி சென்றனர்.

ஊழியர்கள் விரட்டுவந்த போதும் ஆவணத்தை கிழே போடாமல் ஓடிய கில்லாடி ஆடு இறுதியாக அதை  கிழித்து மென்று தரையில் போட்டுவிட்டு ஓடியது.

ஆடு கிழே போட்டுச்சென்ற ஆவணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ஆவணம் முழுவதும் சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்தனர். ஆடு ஆவணத்தை தூக்கிச்செல்வதும், அதை பஞ்சாயத்து ஊழியர் விரட்டி செல்வதையும் சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் செய்திகள்