மராட்டிய ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பரம்பீர் சிங் பணி இடைநீக்கம்

பரம்பீர் சிங் மீது மிரட்டி பணம் பறிப்பு வழக்குகள் குவிந்தன. இது தொடர்பாக வெவ்வேறு போலீஸ் நிலைங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-12-02 23:19 GMT
மும்பை,

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு கார் சம்பவத்தை அடுத்து, அந்த வழக்கை தவறான பாதைக்கு திசை திருப்பியதாக அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டினார். இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதால், அனில் தேஷ்முக் மந்திரி பதவி விலக நேர்ந்தது. மேலும் அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் தற்போது அவர் சிறையில் உள்ளார்.

இந்தநிலையில் பரம்பீர் சிங் மீது மிரட்டி பணம் பறிப்பு வழக்குகள் குவிந்தன. இது தொடர்பாக வெவ்வேறு போலீஸ் நிலைங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் தலைமறைவானார். அவரை 6 குற்ற வழக்குகளில் கைது செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கடந்த வாரம் மும்பை திரும்பி பொது வெளியில் தோன்றினார். தற்போது போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

இந்தநிலையில் பரம்பீர் சிங்கை நேற்று மராட்டிய அரசு அதிரடியாக பணி இடைநீக்கம் செய்தது. முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பின் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இதற்கான ஒப்புதலை அளித்தார். மராட்டியத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்