முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரம் குறித்த சர்ச்சை வினா - சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்டது
12ம் வகுப்பு வினாத்தாளில் குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
புதுடெல்லி,
சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் ஒன்றாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 12ம் வகுப்பு சமூகவியல் பாடத் தேர்வில், 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான கேள்வி ஒன்று இடம்பெற்றிருந்தது.
‘குஜராத்தில் 2002ம் ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும் போது நடைபெற்றது?’ என்பதே அந்த சர்ச்சைக்குரிய வினா ஆகும்.
இந்த கேள்விக்கான பதிலாக நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டிருந்தது. அவை காங்கிரஸ், பாஜக, குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகியவையாகும்.
பள்ளி மாணவர்களுக்கான தேர்வுத்தாளில் இந்த சர்ச்சைக்குரிய வினா இடம்பெற்றதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது பொருத்தமற்ற வினா என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய வினாக்களை தேர்ந்தெடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
A question has been asked in today's class 12 sociology Term 1 exam which is inappropriate and in violation of the CBSE guidelines for external subject experts for setting question papers.CBSE acknowledges the error made and will take strict action against the responsible persons
— CBSE HQ (@cbseindia29) December 1, 2021
பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட கேள்விகளே தேர்வில் இடம்பெற வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.சமூக மற்றும் அரசியல் ரீதியாக மக்களை புண்படுத்தும் விதமான கேள்விகள் பாடத்திட்ட தேர்வுகளில் இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரெயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் பலர் பலியாகினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் பயங்கர கலவரம் மூண்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.