டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கெஜ்ரிவால் கோரிக்கை
மத்திய அரசு டெல்லிக்கு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து, படுக்கைகள் உள்ளிட்டவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பாதிப்புகள் மேலும் மோசமடைந்துள்ளன.
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “டெல்லியில் அனைவருக்கும் போடுவதற்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வேண்டும். 40 லட்சம் டோஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாத காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மாதம் ஒன்றுக்கு 85 லட்சம் தடுப்பூசி என்ற அளவில் மத்திய அரசு வினியோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது டெல்லியில் நாள்தோறும் 1 லட்சம் டோஸ் போடப்படுவதாகவும், இதை 3 லட்சமாக உயர்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.