மராட்டியம் உள்பட 3 மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மராட்டியம், இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மராட்டியம்,இமசால பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியே தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் தான். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சமநிலை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தனியாக செயலியை அமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த சூழலில் உத்தவ் தாக்கரேவுடன் பிரதமர் மோடி ஆலோசித்துள்ளார்.
பிரதமருடனான ஆலோசனைக்கு பிறகு இமாசல பிரதேச முதல் மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் விநியோகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பது பற்றி பிரதமரிடம் தெரிவித்தேன்.
அதேபோல், மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, தடுப்பூசி திட்டம் குறித்தும் தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார். மலைவாசஸ்தலமான இமாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,177- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.