ஆந்திரா: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவிந்த மக்கள்... தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு
ஆந்திராவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் குவிந்தனர். இதனால், தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெங்களூரு,
ஆந்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிழவி வருகிறது.
இதனால், பல மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆந்திரபிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டம் நரசராபேட்டா நகரில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் இடமான நரசராபேட்டா அர்பன் சுகாதார நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மிகுந்த ஆர்வமாக குவிந்ததால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் சமூக இடைவெளியின்றி தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு குவிந்தனர். இதனால், தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுகாதார மையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையில் நின்ற அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
#WATCH | Andhra Pradesh: Chaos ensued at Urban Health Centre in Narasaraopeta city of Guntur district, as people rushed to take their dose of #COVID19 vaccine. Visuals from earlier today. pic.twitter.com/CXs2KHLbJ2
— ANI (@ANI) May 7, 2021
தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் பெருமளவில் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நரசராபேட்டா நகர சுகாதார மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.