சமூக இடைவெளியை மறந்து தடுப்பூசி போட குவிந்த மக்கள்: கேரளாவில் கொரோனா பரவல் அச்சம்
கேரளாவில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் தடுப்பூசி போட முகாம்களில் குவிந்ததால் கொரோனா பரவலுக்கான அச்சம் ஏற்பட்டு உள்ளது.
எர்ணாகுளம்,
கேரளாவில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை 17.4 லட்சம் பேர் பாதிப்படைந்தும், அவர்களில் 13.6 லட்சம் பேர் குணமடைந்தும் சென்றுள்ளனர்.
இதுவரை 5,565 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், கடந்த மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், பொதுமக்களும் ஆர்வமுடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காமல், ஒன்றாக நின்றனர். இதனால், கொரோனா பரவலுக்கான அச்சம் ஏற்பட்டு உள்ளது.