தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்கக்கூடாது - மாநிலங்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மாநிலங்கள் குறைக்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவிறுத்தி உள்ளார்.

Update: 2021-05-06 23:53 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மோசமான சூழல் நீடித்து வருகிறது. லட்சக்கணக்கான புதிய தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மரணங்களால் சுகாதாரத்துறை கையறு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த பயங்கர சூழலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போராடி வருகின்றன. குறிப்பாக கொரோனா பாதிப்பு நிலவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் பிரதமர் மோடி, இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

அந்தவகையில் மத்திய மந்திரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இதில் மாநிலங்களில் கொரோனா நிலவரம், தடுப்பூசி பணிகளின் வேகம், மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.

இதில் மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் விரிவாக பிரதமரிடம் வழங்கப்பட்டது. குறிப்பாக 1 லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகளை கொண்டிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் அதிக பாதிப்புகளை கொண்டிருக்கும் மாவட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தடுப்பூசி பணிகளை குறித்தும், அடுத்த சில மாதங்களில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். அத்துடன் மாநிலங்கள் வாரியாக வீணாகும் தடுப்பூசி அளவு குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

அப்போது இதுவரை 17.7 கோடி டோஸ்கள் போடப்பட்டிருக்கும் தகவல் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 31 சதவீதம் பேர் ஒரு டோசாவது போட்டிருக்கும் தகவல் அவருக்கு கூறப்பட்டது.

மேலும் நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் கையிருப்பு குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மந்திரிகள் குழுவினர் விளக்கினர்.

மேலும் மாநிலங்களின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது. அத்துடன் விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வதன் அவசியமும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் கொரோனா தடுப்புக்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி கூட்டத்தில் வழங்கினார். இதில் குறிப்பாக தடுப்பூசி திட்டப்பணிகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்து பேசினார்.

அந்தவகையில் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்க மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்களை வேறு பணிகளுக்கு மாற்றக்கூடாது எனக்கூறிய பிரதமர் மோடி, ஊரடங்கு நடைமுறைகள் இருந்தாலும் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்