தனியார் மருத்துவமனையில் கொரோனா படுக்கை ரூ.1.20 லட்சத்துக்கு கள்ளசந்தையில் விற்பனை: 3 பேர் கைது
தனியார் மருத்துவமனையில் கொரோனா ஐசியூ படுக்கை ரூ.1.20 லட்சத்துக்கு கள்ளசந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 3 மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் தவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனையில் அரசு சார்பில் ஒதுக்கப்படும் படுக்கைகளை சில இடைத்தரகர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இதே குற்றச்சாட்டை பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி.யும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவர், முதல்-மந்திரி எடியூரப்பாவிடமும் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பதாக கூறி பணம் வசூலிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், ஜெயநகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஜெயநகரை சேர்ந்த நேத்ராவதி என்ற நேகா (வயது 43). இவருடைய உறவினர் ரோகித் குமார் (35) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கொரோனா நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்களிடம் மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறுவார்கள்.
இதற்காக முதலில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படி தெரிவிப்பார்கள்.அவ்வாறு தங்களது வங்கி கணக்குக்கு பணம் கிடைத்தவுடன், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி செய்து கொடுத்தது தெரியவந்தது. இதுவரை 4 நோயாளிகளுக்கு படுக்கை வாங்கி கொடுத்து அவர்களிடம் ரூ.1.50 லட்சம் வரை வாங்கியது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபோல் நெலமங்கலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை ஐசியூ படுக்கையை 1.20 இலட்சத்துக்கு விற்பனை செய்த வழக்கில் மத்திய பிரிவு போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:-
லட்சுமி தேவம்மா என்ற நோயாளி சமீபத்தில் நெலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார், அவரது நிலைமை மோசமடைந்தால் ஒரு ஐ.சி.யூ படுக்கை தேவைப்பட்டது. அதன்பின் ஜலஹள்ளி கிராஸ்-கோரகுண்டேபல்யாவிற்கு அருகிலுள்ள பீப்பில் ட்ரீ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு படுக்கை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.
அவரது மகன் படுக்கை இருப்பு குறித்து விசாரித்தபோது, அம்மருத்துவமனையில் பணியாற்றிய இதய நோய் வல்லுநர் வெங்கட்டா சுப்பாராவ் மற்றும் பிஆர்ஓ மஞ்சுநாத் சந்துரு ஆகியோர் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் பணம் கொடுத்தால் ஐசியூ இருக்கை கிடைக்கும் என தெரிவித்தனர் ” எனக் கூறினார்.
அதன்பின் மூன்றாவது குற்றவாளியான ஆரோக்ய மித்ரா பணியாளர் புனித், எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்க, கொரோனா பாதித்த பெண்ணின் மகனிடமிருந்து 1.20 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரினர். அவர் கூகிள் பே மூலம் 50,000 மற்றும் 70,000 ரொக்கமாக கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்டு எம்.எஸ். ராமையா மருத்துவமனை நோயாளியை சிகிச்சைக்கு அனுமதித்தது. இருப்பினும், சில மணி நேரம் கழித்து அப்பெண் இறந்தார்.
அவரது குடும்பத்தினர் அவசர உதவி தொலைபேசி எண்ணான 112யை அழைத்து இதுகுறித்து தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.