மருத்துவமனைகளில் தீவிபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தல்

மருத்துவமனைகளில் தீவிபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-05-06 00:36 GMT
புதுடெல்லி,

அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமீபகாலமாக மருத்துவமனைகளில் தீவிபத்துகள் நடந்து வருகின்றன. தற்போது, கோடை காலமாக இருப்பதால், அதிக வெப்பநிலை காரணமாகவோ, பராமரிப்பு இல்லாமை காரணமாகவோ, உயர் மின் அழுத்தம் காரணமாகவோ மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

அதன்மூலம் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்புகளுக்கு சேதமும் ஏற்படக்கூடும். ஆகவே, மருத்துவமனைகளிலும், நர்சிங் ஹோம்களிலும் தீவிபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தீ தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய தீவிபத்துகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்