மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றார்

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 3-வது முறையாக மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-05-05 22:35 GMT

213 தொகுதிகளில் வெற்றி

மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியை பிடித்தார். 66 வயதாகும் மம்தா பானர்ஜி காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. 77 இடங்களில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 12 பேர் கொல்லப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு சதி செய்து இத்தகைய வன்முறை தூண்டி விடப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

பதவி ஏற்பு

இந்நிலையில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் ஏற்பாடுகள் நேற்று முன்தினம் தொடங்கின. கடந்த 3-ந் தேதி மம்தா பானர்ஜி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஏற்கனவே வகித்து வந்த முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து அவர் கடிதம் கொடுத்திருந்தார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெகதீப் ஆட்சி அமைக்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி நேற்று காலை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஜெகதீப் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

3-வது முறையாக...

மம்தா பானர்ஜி பதவி ஏற்கும் விழா கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்றது. இதனால் பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காள மூத்த தலைவரான புத்ததேவ் சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட மிக குறைந்த அளவில் அழைப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக நேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் மந்திரிசபையை அமைக்க உள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்காள எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பீமன் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

6 மாதத்துக்குள்..

மம்தா பானர்ஜி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவியேற்கும் போதும் மம்தா பானர்ஜி எம்.எல்.ஏ.வாக இல்லை. பதவி ஏற்று சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்