கர்நாடகத்திற்கு விரைவில் 1,500 டன் ஆக்சிஜன் கிடைக்கும் - மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர்

கர்நாடகத்திற்கு விரைவில் 1,500 டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்று கர்நாடக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-05 21:28 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஆக்சிஜன் கொள்முதல், வினியோகம் மற்றும் மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜனை பெறுவது உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜெகதீஷ்ஷெட்டர் நேற்று உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. இவற்றை வினியோகிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை கர்நாடகத்திற்கே ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இதுகுறித்து மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் தொலைபேசியில் பேசினேன். மாலைக்குள் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆக்சிஜனை அனைத்து மாவட்டங்களுக்கும் டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பும் பணியை நாங்கள்செய்து வருகிறோம். வெளிநாட்டில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் கர்நாடகத்திற்கும் ஆக்சிஜன் ஒதுக்கீடு கிடைக்கும். கர்நாடகத்திற்கு விரைவில் 1,500 டன் ஆக்சிஜன் கிடைக்கும்.

இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.

மேலும் செய்திகள்