கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தையின் சிதையில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தையின் சிதையில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பர்மிர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரதாஸ் ஷர்தா. 73 வயதான இவர் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த தாமோதரதாஸ் ஷர்தாவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த தாமோதரதாசின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் தாமோதரதாசின் இளைய மகள் சந்திரா ஷர்தா (34 வயது) பங்கேற்றார்.
இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று தாமோதரதாசின் உடல் தகனம் செய்யப்பட்டது. தகன மேடையில் அவரின் உடல் வைக்கப்பட்டு அது எரியூட்டப்பட்டது. அப்போது, தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் தகன மேடை அருகே நின்றுகொண்டிருந்த தாமோதரதாசின் இளைய மகள் சந்திரா ஷர்தா திடீரென தந்தையின் சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால், அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
துரிதமாக செயல்பட்ட அவர்கள் சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்ற சந்திராவை கடுமையான தீக்காயங்களுடன் மீட்டனர். அவரை உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்திராவின் உடலில் 70 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேல் சிகிச்சைக்காக ஜோடாப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தந்தையின் சிதையிலேயே விழுந்து மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.