தலைக்கு மேல் வெள்ளம்: மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொடுங்கள் - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
"தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. டெல்லி மருத்துவமனைகளுக்கு எப்படியாவது தேவையான ஆக்சிஜன் கொடுங்கள்" என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா 2வது அலை பரவலில் மருத்துவ அக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கலான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், "தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் தான் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். 8 உயிர்கள் பலியாகியுள்ளன.
இதையெல்லாம் கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் தான் டெல்லிக்கு அன்றாடம் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். அதைக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு ஆகும்.
நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுக்காதது ஏன் என மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்
ஆக்சிஜனை கொண்டுவருவதற்கான டேங்கர்களையும் மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.