முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்காற்றுகிறது.
அந்தவகையில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி மரணத்தை தழுவுவது உண்டு. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர்.
இப்படி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதிலும் கொரோனா பரவி வரும் நிலையில், பல்வேறு அதிகாரம் பெற்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் ஆய்வு நடத்தினார்.
கொரோனாற்றும் நிவாரண பணிகள் மக்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு அம்சங்களையும் இந்த குழுவினர் ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திப்புக்குப்பின், முன்கள சுகாதார பணியாளர்களின் காப்பீட்டு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.