மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 56,286 பேருக்கு கொரோனா - 376 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 56 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 56 ஆயிரத்து 286 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 29 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 130 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 49 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று 376 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.