பெங்களூருவில் 20-ந் தேதி வரை 144 தடை உத்தரவு; போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
பெங்களூருவில் வருகிற 20-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கமல்பந்த் ஆலோசனை
கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், 6-வது ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளட்ட கோரிக்கைகளை வலியுறுத்து இன்று (புதன்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் அரசு பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவதால், பெங்களூருவில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன், போலீஸ் கமிஷனர் கமலபந்த் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், முக்கியமான பஸ் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவல் இருப்பதால் ஏற்கனவே போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அரசு தடை விதித்திருக்கும் நேரத்தில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
144 தடைஉ த்தரவு
பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுபான விடுதிகள், பப்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 4-ந் தேதியே அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இதன் காரணமாக பெங்களூருவில் போராட்டங்கள், ஊர்வலங்கள், ஒரே இடத்தில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை. விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது 144 தடை உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் இருப்பதால் பெங்களூரு நகரவாசிகள் போலீசாரின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கைது செய்யப்படுவார்கள்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூருவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்காக கடந்த 4-ந் தேதியே பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நகரில் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்திற்கு அனுமதி இல்லை.
அதையும் மீறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து சென்று விசாரணை நடத்திவிட்டு, அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் முன் எச்சரிக்கையாக பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.