முதல்-மந்திரி குறித்து அவதூறாக பேசுவதை யத்னால் எம்.எல்.ஏ. நிறுத்தி கொள்ள வேண்டும் - மந்திரி பி.சி.பாட்டீல் பேட்டி
முதல்-மந்திரி எடியூரப்பா குறித்து அவதூறாக பேசுவதை யத்னால் எம்.எல்.ஏ. நிறுத்தி கொள்ள வேண்டும் என்று மந்திரி பி.சி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு,
கர்நாடக மாநில விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தாவணகெரே மாவட்டத்திற்கு வந்தார். அவர், ஹரிஹரா தாலுகா உட்கடகாத்ரே அஜ்ஜய்யா கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் மந்திரி பி.சி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பா மிகச்சிறந்த முதல்-மந்திரி ஆவார். பா.ஜனதா, ஆட்சி அமைய காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் கூடுதலாக நிதி வழங்கி கொண்டிருக்கிறார். அதன்படி அந்த தொகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
எப்போது பார்த்தாலும் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா குறித்து அவதூறாக பேசி வருகிறார். அதை அவர் நிறுத்தி கொள்ளவேண்டும். நாக்கு இருக்கிறது என்பதற்காக யத்னால் வாய்க்கு வந்தபடி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். 17 எம்.எல்.ஏ.க்கள் இல்லையென்றால் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதையே திரும்ப, திரும்ப கூறினால் அதற்கான மதிப்பு குறைந்துவிடும். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.