ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசனை - ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி தகவல்
கூடுதல் ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ். இவர் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள செர்கே லாவ்ரோவ் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு வெளியுறவுத்துறை மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் கூறியதாவது,
இன்று நடைபெற்ற ஆலோசனையில் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்தே பெரும்பாலும் விவாதிக்கப்பட்டது. இந்தியா-ரஷ்யா இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மிகுந்த ஆற்றல் மிக்கதாகவும், முன்னோக்கியதாகவும் உள்ளது. இரு நாட்டு பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சர்வதேச வடக்கு-தெற்கு நீர்வழி போக்குவரத்து மற்றும் சென்னை வல்டிவஸ்டோக் இடையேயான நீர்வழி போக்குவரத்து இணைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்திற்கு ரஷ்யா ஆதரவளித்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் கூறியதாவது,
ரஷ்ய-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்த உள்ளோம். மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கூடுதல் ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எங்கள் இந்திய கூட்டாளி மற்றும் நட்பில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. சீனாவுடன் எந்தவித ராணுவ கூட்டணி ஒப்பந்தமும் மேற்கொள்ளும் திட்டம் ரஷியாவிடம் இல்லை’ என்றார்.