இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,86,049 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது நாட்டைத் தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த கொடிய தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றைய தினம் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 446 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 86 ஆயிரத்து 049 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 279 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 88 ஆயிரத்து 223 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 547 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது.