‘தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை’- நீதிபதியிடம் இளம்பெண் வாக்குமூலம்

ஆபாச வீடியோ விவகாரத்தில் தங்களது மகள் கடத்தப்பட்டு இருப்பதாக பெற்றோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி முன்னிலையில் இளம்பெண் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என அவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Update: 2021-04-05 22:00 GMT
பெங்களூரு:

3 வழக்குகள் பதிவு

  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு எதிராக நடந்த சதி என்று ரமேஷ் ஜார்கிகோளி கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவநகர் மற்றும் தன்னை கற்பழித்ததாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவாகி இருந்தது. இதுபோல், தங்களது மகள் கடத்தப்பட்டு இருப்பதாக பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவாகி இருந்தது. அந்த வழக்கு பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

  தற்போது சதாசிவநகர், கப்பன்பார்க், ஆர்.டி.நகர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் பதிவான வழக்குகளும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த இளம்பெண் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிபதி முன்னிலையில், வசந்த்நகரில் உள்ள குருநானக் பவனில் உள்ள சிறப்பு கோர்ட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிபதியிடம் வாக்குமூலம்

  அதாவது இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது பதிவான கற்பழிப்பு வழக்கில், நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில், தனது மகள் கடத்தப்பட்டதாக இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த வழக்கிலும், நீதிபதியிடம் சட்டப்பிரிவு 164-ன்படி இளம்பெண் நீதிபதியிடம் வாக்குமூலம் அளிக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நீதிபதியும் அனுமதி வழங்கினார். இதையடுத்து, நேற்று காலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் விசாரணை அதிகாரி கவிதா முன்னிலையில் இளம்பெண் ஆஜராகி இருந்தார்.

  பின்னர் மதியம் 3.30 மணியளவில் வசந்த்நகரில் குருநானக் பவனில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் இளம்பெண் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த முறை நீதிபதி முன்னிலையில் இளம்பெண் ஆஜராகும் போது, அவரது வக்கீல் உடன் இருந்திருந்தார். ஆனால் நேற்று நீதிபதி, இளம்பெண், தட்டச்சர் ஆகிய 3 பேர் மட்டுமே இருந்தார்கள். நீதிபதியிடம் 1 மணிநேரம் 30 நிமிடங்கள் இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே போலீசாரிடம் இளம்பெண் அளித்திருந்த வாக்குமூலமும் நீதிபதியிடம் வழங்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

கடத்தப்படவில்லை

  அதாவது போலீசாரிடம் தனது பெற்றோருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தான் கடத்தப்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ளனர். நான் கடத்தப்படவில்லை. தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. ஆபாச வீடியோ விவகாரத்தில் எனது உயிருக்கு ஆபத்து இருந்ததால் தலைமறைவாக இருந்தேன் என்று இளம்பெண் கூறி இருந்தார். போலீசாரிடம் கூறிய அதே தகவலை தான் நேற்று நீதிபதியிடம் இளம்பெண் வாக்குமூலமாக அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குமூலத்திற்கு பின்பு இளம்பெண்ணை சிறப்பு கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றார்கள். சிறப்பு கோர்ட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

  பின்னர் மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் வைத்து இளம்பெண்ணிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரி கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து, விசாரணை முடிந்ததும் அங்கிருந்து இளம்பெண் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்