மாயமான கல்லூரி மாணவி கழுத்தை நெரித்து கொலை; காதலன் தற்கொலை முயற்சி

பெங்களூருவில் மாயமான கல்லூரி மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய காதலன் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி ெசய்தார்.

Update: 2021-04-05 21:32 GMT
பெங்களூரு

மாணவி மாயம்

  பெங்களூரு பண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோமசந்திர பாளையா பகுதியில் 17 வயது இளம்பெண் வசித்து வந்தார். அந்த இளம்பெண் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி திரும்பி வரவில்லை. இதையடுத்து, அன்றைய தினம் இரவு தனது மகளை காணவில்லை என்று கூறி மாணவியின் பெற்றோர் பண்டேபாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தார்கள்.

  அதே நேரத்தில் மாணவி, சோமசந்திர பாளையாவில் வசிக்கும் ராஜு (25) என்பவருடன் பழகி வந்ததும், அவரை காதலித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ராஜுவை போலீசார் தேடினார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலையில் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் அருகே ஒரு வாலிபர் பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருந்தார். இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாலிபர் தற்கொலை முயற்சி

  இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வாலிபருக்கு நேற்று சுயநினைவு திரும்பியது. அப்போது அந்த வாலிபர் தான் சோமசந்திர பாளையாவை சேர்ந்த ராஜு என்றும், தான் காதலித்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு ரெயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் டாக்டர்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த இளம்பெண்ணின் உடல் தனது வீட்டுக்குள் இருப்பதாகவும் ராஜு கூறினார். இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனே ராஜுவின் வீட்டுக்கு சென்று பார்த்த போது மாணவியின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் ராஜுவிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கழுத்தை நெரித்து கொலை

  அப்போது அந்த மாணவியும் ராஜுவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் ராஜுவின் வீட்டுக்கும் மாணவி சென்று வந்துள்ளார். அதுபோல, கடந்த 3-ந் தேதி சென்ற போது, மாணவிக்கும், ராஜுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த ராஜு, மாணவியின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது.

  இதையடுத்து, ராஜு கைது செய்யப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்