தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் நாட்டில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன
நாட்டில் மராட்டியம், கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை கடந்த 24 மணிநேரத்தில் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர் ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுவாகும்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மராட்டியம், கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்கள் கடந்த 24 மணிநேரத்தில் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.
மராட்டிய மாநிலம் முழுவதும் புதிதாக 47,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,57,885 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 155 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,033 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் உயிரிழப்பு விகிதம் 1.83 சதவீதம் ஆகவுள்ளது.
கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 20 ஆயிரத்து 434 ஆக அதிகரித்து உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 3,728 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 657 ஆக உயர்ந்து உள்ளது.
டெல்லியில் இன்று மேலும் 3,548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,79,962 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,096 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,357 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.37 லட்சத்தை தாண்டி உள்ளது.
தமிழகத்தில் 3,672 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது தவிர ராஜஸ்தான் (2,429), ஆந்திர பிரதேசம் (1,326), இமாசல பிரதேசம் (567) மற்றும் உத்தரகாண்ட் (547) என அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
இதனை தொடர்ந்து மராட்டியம், சத்தீஷ்கார் மற்றும் பஞ்சாப்பிற்கு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 50 உயர்மட்ட பொது சுகாதார குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது.