ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற வாலிபர் கைது

ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-04-04 21:54 GMT
பெங்களூரு: ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உடற்தகுதி தேர்வு

பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா சப்தஸ்கரா பகுதியை சேர்ந்தவர் யாசின் அப்துல் கரிசாப் (வயது 25). இவர் கர்நாடக அரசு சார்பில் நடத்தப்பட்ட போலீஸ் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் 19-ந் தேதி பெங்களூரு ஆடுகோடி பகுதியில் வைத்து போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடந்து இருந்தது. ஆனால் இதில் யாசின் கலந்து கொள்ளவில்லை. தனக்கு பதிலாக நண்பரான சச்சின் குஜ்கெரே என்பவரை உடல்தகுதி தேர்வுக்கு அனுப்பி வைத்தார். அந்த தேர்வில் கலந்து கொண்டு சச்சினும் வெற்றி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் கலந்து கொள்ள யாசின் வந்து இருந்தார். அப்போது மீண்டும் சில உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் யாசின் தோல்வி அடைந்தார்.

கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் கடந்த ஆண்டு நடந்த உடற்தகுதி தேர்வு தொடர்பான வீடியோ காட்சிகளை எடுத்து பார்த்தனர். அப்போது யாசினுக்கு பதிலாக சச்சின் உடல்தகுதி தேர்வில் கலந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து யாசினை பிடித்து ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் யாசின் மீது போலீஸ் அதிகாரிகள் புகாரும் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசினை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்