ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு
ராஜஸ்தானில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன என மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது.
இதன்படி, ராஜஸ்தானுக்குள் வேறு மாநிலங்களில் இருந்து நுழைய மற்றும் வெளியே பயணம் செய்பவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன.
இரவு ஊரடங்கு உத்தரவுகளை மாவட்ட மாஜிஸ்திரேட் அமல்படுத்தலாம். ஆனால், இரவு 8 மணிக்கு முன்பும் மற்றும் காலை 6 மணிக்கு பின்பும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது பற்றி அரசின் அனுமதியை பெற வேண்டும்.
உணவு விடுதியில் இருந்து உணவை வாங்கி செல்லலாம். டெலிவரி சேவைக்கும் அனுமதி அளிக்கப்படும். இவை தவிர்த்து உணவு விடுதிகள் இரவு ஊரடங்குக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு கூடுதலாக அனுமதி கிடையாது. திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும் என ராஜஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது.